இனி ஒரு புது விதி செய்வோம் – 3 – உன்னை நீ அறிய வேண்டும்

உன்னை நீ அறிய வேண்டும்!

எங்களது வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன? அவற்றுக்கு நாம் எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம்? அவற்றால் நமக்கு விளைவது என்ன?
வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் நிறைய விடயங்களில் சிக்கல்களை சந்திக்கிறோம், உதாரணமாக,
1. பணம்/ பொருளாதார ரீதியிலான சிக்கல்கள்!

2. உறவுகள்/ நண்பர்களுடனான சிக்கல்கள்!

3. அரசு/ சட்டங்கள் என்பன் ஏற்படுத்தும் சிக்கல்கள்!

4. தனி மனித மனம்/ உணர்வுகள் சம்பந்தமான சிக்கல்கள்!

5. தனி மனித ஆரோக்கியம் பேணுவதில் சிக்கல்கள்!

6. தனி மனித முக்கியத்துவம் சார்ந்த பிரச்சினைகள்!

இப்படி வளரும் பட்டியலில், சிக்கல்கள் / பிரச்சினைகள் என்பனவற்றை முன்நிறுத்துவது எனது நோக்கம் அல்ல, ஆனால் இந்த சிக்கல்கள் நம்மை எப்படி ஆட்கொள்ளுகிறது, எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது என்பது உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டிய ஒன்று!
முதலாவதாக, தனிமனித முக்கியத்துவம் பற்றிய விடயத்தை ஆய்ந்தோமானால், இன்று பலரது மனங்களில், அவர்களது இருப்பு/ முக்கியத்துவம் என்பன வற்றில் ஆழ்ந்த சந்தேக நிலை நீடிக்கிறது!
என்னால் என்ன பயன்? நான் ஒருவருக்கும் பிரயோசனம் இல்லாதவன்! எனது இருப்பு வெறுமை மற்றும் வீணானது என்பது போன்ற ஒரு வகை கழிவிரக்கத்துடன் வாழ்பவர்கள் அதிகம்! ஏன் நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு தருணத்திலேனும் இவ்வகை உணர்வுகளை கடந்திருப்போம்!
ஆனால் உண்மை நிலை என்ன?
நமது உடல் கழிவென்று வெளியேற்றுவதாலேயே மரங்கள் சுவாசிக்கவும், பயிர்களுக்குப் பசளையாகவும் பயன்தர முடியும் என்றால், நம்மால், நமது இருப்பால் பயன் தரக்கூடிய விடயங்கள் எத்தனை? அவற்றை அறிவதில் மற்றும் உணரந்து பயனளிப்பதில் ஆய்ந்த அறிவு முக்கியம்!
நாம் நமது வாழ்வை வாழ்கிறோமா, அல்லது பிறரது வாழ்வை வாழத் தலைப்படுகிறோமா? இங்கே நம்மை பிறருடன் ஒப்பிடும் கணம், நம்மைத் தொலைக்கிறோம்!
எனதிருப்பு, அதற்கான காரணம், எனது கடமை, எனது வாழ்வு என்பன இன்னொருவனுடையதை ஒத்திருப்பதில்லை! எனவே, என்னைப்போல் ஒருவன்/ இன்னொருவன் இவ்வுலகில் இல்லை என்பதை உணர்ந்துவிடு!
அவ்வுணர்வு கொடுக்கும் எண்ணமதை நீ தனித் தன்மையானவன் என்று! அப்படி உனது தனித்தன்மை என்ன என்பதை தேடு, அது உன் உள்ளத்தில் தேடப்பட வேண்டிய ஒன்று! பிறர் அறியாத, உன்னால் மட்டுமே ஐயந்திரிபு அற அறிய முடிகிற விடயமாக இருக்கும்!
உன் உடல் ஆரோக்கியமாக இயங்க, அவற்றின் உறுப்புகள் ஒவ்வொன்றும் அவற்றுக்குரிய வேலையை திறம்பட செய்ய வேண்டும், அதே
மாதிரி இந்த உலக இயக்கத்தில், ஏதோவொரு பகுதி உனக்கான வேலையை நீ செவ்வனே செய்வதில் தன் ஆரோக்கியமான இயக்கத்தை கொண்டு செல்லக் காத்திருக்கிறது!

கண்டுபிடி!

கனடாவில் வசித்துவரும் இவர், தன்னம்பிக்கை, வாழ்க்கைமுறை தொடர்பான அனுபவங்களினை தனது எழுத்துக்கள் மூலம் வழங்கிவருகின்றார்.
உங்கள் கருத்துக்கள்