ஈழமண் தந்த கலைச்சிகரம் A.E.மனோகரனுக்கு அஞ்சலிகள்

 

பொப்பிசைப் பாடல் யுகத்தில் – – – –

இசை உலகில் மறக்க முடியாத காலம் பொப் இசைப் பாடல்களின் காலம். இலங்கைத் தமிழ் இசை உலகில் யாழ்ப்பாணத்தில் பிறப்பெடுத்த இசை வடிவம் தான் பொப் இசை. அமெரிக்காவில் எல்விஸ் பிரஸ்லீ எனும் இசைக் கலைஞர் பொப் கிற்றார் இசைக் கருவியை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பாடிய பொப் இசைப் பாடல்கள் உலகப் பிரபலம் பெற்த் தொடங்கியது. 1960 களின் தொடக்கத்தில் நித்தி கனகரட்ணம் எனும் இசை ரசனை மிக்கவர் அமெரிக்க பொப் பாடல்களைப் பின்பற்றித் தானும் தமிழில் பாடல்களை உருவாக்கத் தொடங்கினார்.
அவரால் உருவாக்கப்பட்ட பாடல்களை யாழ் நகர் ஸ்ரான்லி வீதியில் சிறிதர் தியேட்டருக்கு முக்பாக இருந்த நித்தி றெக்கோடிங்பார் எனும் ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அவ்வாறு உருவாக்கப்பட்ட பொப்பிசைப் பாடல்கள் இலங்கையில் மட்டுமல்ல, உலகத்தமிழ் இசை உலகில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கப்பட்ட பொப் இசைப் பாடல்கள் இவர்களுக்கு ஓர் உந்துதலாக அமைந்த்து.
1966 ஆம் ஆண்டு யாழ் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நடந்ததும் ஒலிபரப்பாளர் நித்தியால் நித்தி கனகரட்ணம் பாடிய பொப் இசைப் பாடல்கள் ஒலிபெருக்கியில் போடப்பட்டது. ”சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே, பள்ளிக்குச் சென்றாளோ, படிக்கச் சென்றாளோ, அட வாடா மருமகா என் அழகு மருமகா பள்ளிக்குத் தான் சென்றாள் படிக்கத் தான் சென்றாள். ஐயோ மாமி அவளை அங்கே விடாதே…..” என நீளும் பாடல் ஒலித்தது. அதன் பின்னர் ”கள்ளுக்கடைப் பக்கம் போகாதே உன் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன்………” எனும் பாடல் ஒலித்தது பின் ”ஐயையோ ஊரே கெட்டுப் போச்சு…” எனும் பாடல் ஒலித்தது. விளையாட்டுப் போட்டி முடிந்த பின்பு ஒலிக்க இப்பாடல்பகளுக்கு ரசிகர்கள் மிக உற்சாகமாக நடனமாடினார்கள். மைதானம் களைகட்டியது. சிறு எதிர்ப்புக் கிளம்பினாலும் கூட பெரும் ஆரவாரத்துடன் இப் பாடல்கள் வரவேற்கப்பட்டது. சின்ன மாமியே பாடல் வடமராட்சி அல்வாய் கிராமத்தைச் சேர்ந்த கமலநாதன் என்பவரால் இயற்றப்பட்டதாகும்.இதன் மூலப் பிரதியை நேரில் சென்று பார்த்தேன்.
சின்ன மாமியே பாடலை ரசிகர்கள் தமது உற்சாகத்திற்கேற்ப வரிகளை மாற்றிப்பாடுவார்கள், இப்பாடல் மிகுந்த கலகலப்பைத் தருகின்றது. இலங்கைத் தமிழ் இசை வானில் ஓர் திருப்பு முனையாக யாழ் மத்தியகல்லூரி மைதான இசை நிகழ்ச்சி இருந்தது.”சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே” எனும் பாடல் இன்றும் பல்கலைக்கழகங்களில் இளைஞர் களியாட்ட நிகழ்வுகளில் பாடப்பட்டு வருவதைக் காணலாம். அன்று புறப்பட்ட பொப் இசைப் பாடல்கள் இலங்கையினதும் இசை வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை தோற்றுவித்தது சிங்கள மொழி இலங்கையில் மட்டுமே பேசப்படும் ஓர் மொழியாகும்.
ஆனால் உலகத் திசை யெல்லாம் ஆட்சி செலுத்திய தமிழ் மொழிக்கு இலங்கையின் தலைபோல அமைந்த யாழ்ப்பாண்திலிருந்து புறப்பட்ட பொப் இசைப் பாடல்கள் புதிய வரவாக இருந்தது. நித்தி கனகரட்ணத்தையே தமிழ் பொப் இசைப் பாடகர்களின் தந்தையாகப் போற்றி வருகின்றனர். போர்த்துக்கீசரின் இசைப் பண்பாட்டிலும் பொப் இசை பாடல்கள் பெரும் செல்வாக்கைச் செலுத்தியதாக இசை வல்லுநர்கள் கூறுகின்றனர்.


யாழ்ப்பாணத்தில் நித்தி கனகரட்ணம் பொப் கிற்றாருடன் இசைத்த பொப் பாடல்கள் பிரபலமாக ஏ.ஈ.மனோகரன் எனும் அற்புத பொப் பாடகர் உருவாகினார். அவரது குரலில் ஒலித்த பாடல்கள் பெரும் வரவேற்ப்பைப் பெற்றன. அதில் மிகவும் பிரபலமான பாடல் ”.இலங்கை என்பது நம் தாய்திருநாடு, எழில் மிகுந்த வளம் நிறைந்த இயற்கை நல் நாடு, மாணிக்க முத்துக்களும் மாண்புறும் காட்சிகளும் மனதைக் கவர்ந்திடும் நாடு, யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன் சுவை ஊறும், பனை மரமும் புகையிலையும் ஒன்றாக வளரும், கந்தனின் நல்லூர் கண்டு கடல்வளம் நிறைய உண்டு,மங்காத காட்சியும் தானே மீன் பாடும் தேன்நாடு கிழக்கிலே உண்டு, எண்ணெய் வளம் பேசாலை மன்னாரில் உண்டு மருதமடு நாயகியின் மங்காத காட்சியும் உண்டு, கோணேசர் கோயில் கொண்ட திருமலை ஊரில் இராவணேசன் ஞாபகமும் வருகுது அங்கே கந்தளாய் இனித்திடுமே, கல்லோயா மயக்கிடுமே கண்களால் காண அழைக்குதே.”
என்றவாறே இப்பாடல் ஒலித்தது. மிகப் பிரபலத்தைப் பெற்றது. சிங்களப் பொப் பாடலின் மெட்டைத் தழுவிய இப்பாடல் அன்றைய இசை நிகழ்ச்சிகளில் மிகவும் ஆரவாரத்துடன் பாடப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் மேடையில் பாடி ஆட ரசிகர்களும் ஆடினார்கள் இலங்கையில் வாழ்ந்த பறங்கியர்கள் பாட்டுப் பாடி ஆடுவது பைலா எனப்பட்டது. அதனைப் பின்பற்றி எம்மவரும் மோடையில் ஆடிப் பாடிய போது அதனை பைலா என்றழைத்தார்கள். சிங்கள மக்களிடையே தான் இது பிரபலம் பெற்றிருந்தது.
பொப் இசைப் பாடல்களின் உச்ச யுகம் 1970 – 77 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இருந்தது. இலங்கையின் தமிழ் பேசும் பிரதேசங்களில் இசை நிகழ்ச்சி நடக்கும் போது தென்னிந்திய சினிமாப் பாடல்களுடன் பொப் பாடல்களையும் கலந்து பாடும் வழக்கம் உருவானது. றேடியோ சிலோன் எனப்பட்ட இலங்கை வானொலியில் சனி, ஞாயிறு, திங்களில் 15 நிமிட நேரம் பொப் இசை பாடல்கள் நேயர் விருப்பமாக ஒலிபரப்பபட்டன. அக்காலத்தில் யாழ் மண்டைதீவிலிருந்து அலைவரிசை நிலையம் மூலமாக தென்னிந்தியாவின் பெரும்பாலான இடங்களில் றேடியோ சிலோன் தெளிவாகக் கேட்டது. இதனால் எம்மவரின் பொப் இசைப் பாடல்கள் அங்கும் பிரபலமாகிப் பாடப்பட்டன.
பொப் பாடல்களில் நித்தி கனகரட்ணம் ஏ.ஈ.மனோகரன் ஆகியோருடன் எஸ்.ராமச்சந்திரன், ஸ்ரனி சிவானந்தன், டேவிட் ரஜேந்திரன், கனகாம்பாள் சதாசிவம், அமுதன் அண்ணாமலை, முத்தழகு எனப் பலர் பிரபலமாக இருந்தார்கள். இதில் அமுதன் அண்ணாமலையின் பாடல்கள் தனித்துவமான திறமையுடன் பிரபலமாயிருந்தது. சிங்களப் பாடகர்களான எம்.எஸ்.பெர்னாண்டோ, எச்.ஆர்.ஜோதிபால, திறீ ஸ்ரார்ஸ் எனப்பட்ட சிங்களப் பெண் சகோதரிகளான பாடகிகளும் பிரபலம் பெற்றிருந்தனர். தமிழ்ப் பிரதேச மேடை பொப் இசை நிகழ்ச்சிகளுக்கு இவர்கள் பெரு வரவேற்புடன் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் பாடிய சிங்களப் பொப் இசைப் பாடல்களும் எம்மவரால் பாடிப் பிரபலம் பெற்றது.

அவற்றில் ஞாபகத் திரையில் இருப்பவற்றைப் பார்ப்போம்.
1) சூட மாமி கேபலாண்ட ஜனவ மேய பீ………..
2) சுராங்கனி, சுராங்கனி, சுராங்கனிக்க மாலு கெனாவா, மாலு மாலு சுராங்கனிக்க மாலு கெனாவா……….
3) போர்த்துக்கீசக் காரயா…………
இசைக் குழுக்களில் கலந்து பாடப்பட்ட பொப் இசைப் பாடல்கள் நாளடைவில் தனியே பொப் பாடல்களை மட்டும் பாடும் இசை நிகழ்ச்சிகளாக உருவாகின. Super gold in chines (சுப்பர் கோல்ட் இன் சைனீஸ்) எனும் இசைக் குழு மிகப் பிரபலம் பெற்றிருந்தது.
திருமண நிகழ்வுகளில் கோயில் திருவிழாக்களில் அரச, தனியார் நிறுவன திறப்புவிழாக்களில் எல்லாம் பொப் இசைப் பாடல் கச்சேரிகள் தனியே வைக்கும் யுகமொன்று மலர்ந்தது. இவ் இசைக் கச்சேரிகள் நடக்குமிடங்களில் பல்லாயிரக் கணக்கில் ரசிகர்கள் திரண்டார்கள். ஆடினார்கள், ஆனந்தமடைந்தார்கள். தென்னிந்திய சினிமாப் பாடல்களைத் தமிழ் மொழியில் பதிவேற்றம் செய்துள்ளார்கள். கூகுள் தேடு தளத்தில் தமிழ் மொழியில் பாடலின் முதல் வரியை ரைப் செய்தவுடன் வருகின்றது. அதைப்போல இந்தப் பொப் இசைப் பாடல்களையும் பதிவேற்றம் செய்ய முன்வர வேண்டும். அதன் மூலம் இந்த இசை மரபு சாகா வரம் பெற முடியும்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொப் இசைப் பாடல் நிகழ்சிசிகளுக்கு அரியாலையைச் சேர்ந்த லோகேஸ் என்பவர் அறிவிப்பாளராகக் கலந்து கொண்டார். இவரது அறிவித்தல் பாணி தனித்துவமாக இருந்தது. ஒலி வாங்கியைப் பிடித்துக் கொண்டு இவர் அறிவித்த வித்ததைக் கண்டு ரசித்துப் பலர் பின்பற்றினார்கள். இலங்கை வானொலியில் செய்தி வாசித்த சிலர் இவரது அறிவிப்புப் பாணியைப் பின்பற்றியதாகவும் நினைவு கூருகின்றனர். யாழ்ப்பாண பஸ் நிலையம் இப்போதிருந்ததிற்கு முன்பிருந்த நிலையத் திறப்பு விழா வைபவத்தில் பெரும் பொப் இசைக் கச்சேரி ஒன்று நடந்தது. ஆயிரமாயிரமாக மக்கள் திரண்டிருந்து ரசித்தார்கள்.


எம்மவரால் காலத்திற்கு காலம் பாடி ஆடி ரசிக்கப்பட்ட பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
1. அடிடா சுந்தரலிங்கம், அடிடா சுந்தர லிங்கம், சுந்தரலிங்கமய்யா….
2. மால் மருகா எழில் வேல் முருகா……
3. ஓ சீலா ஓ லீலா, டோன்ற் லுக் அற் மீ……..
4. ஹாய் ஹாய் மீனாட்சியின் எலிகள் பட்டாளம், அங்குமிங்கும் ஓடிடியோடி ஓரே கும்மாளம்………. வாலறுந்த போனாலும் வம்புகளோ தாராளம். நாலு காலில் ஓடியோடி ஓரே கும்மாளம்.
5. வாடா இராசநாயகம், வாடா இராசநாயகம், கொண்டு வாடா மசாலா வடை இராசநாயகம்……
6. வடை வடையென விற்று வந்தாள் வாயாடிக் கிழவி……..
7. சோழன் சோறு பொங்கட்டுமா, இறுங்கு சோறு பொங்கட்டுமா சொல்லுங்கோ மருமகனே……..
இப்பாடலை ரசிகர்கள் தங்கள் வசதிக்கேற்றவாறு வரிகளை மாற்றியமைத்துப் பாடுவார்கள். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்போதும் பெறுகின்றது. இப்பாடல்களை யார் இயற்றியது யார்? யார் இசையமைத்து போன்ற விபரங்களைச் சரியாகப் பெற முடியவில்லை. ஆனாலும் இப்பாடல்களை இன்றுவரையும் முணுமுணுக்கும் இசை ரசிகர்கள் நிறையவே உள்ளனர். இப்பாடல்களின் இசைத்தட்டுகளையோ, பெற முடியாதமை கவலைக்குரியது தான்.
தினக்குரல் வாரவெளியீடு – 21.10.2012 ,28.10.2012

உங்கள் கருத்துக்கள்