யாழ்ப்பாணப் நூலகம் எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள்; அடுத்தது என்ன?

இன்றுடன் யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைய நாளை அந்த அழிவின் துயரினை நினைவுகூர மட்டும் பயன்படுத்தாமல் எஞ்சியவற்றினை எப்படிப்  பாதுகாத்துப் பயன்படுத்துவது என்பது பற்றியும் சிந்திப்பது அவசியமாகிறது.

நூலக நிறுவனத்தினராகிய நாம் கடந்த 14 ஆண்டுகளில் இலங்கைத் தமிழ்ச் சமூகங்களின் 55,000 ஆவணங்களை எண்ணிம வடிவத்தில் ஆவணப்படுத்தி இணைய நூலகமாக வழங்கியிருக்கிறோம். 7,000 நூல்கள், 10,000 சஞ்சிகைகள், 35,000 பத்திரிகைகள் 3,000 பிரசுரங்கள் அவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 3,150 எழுத்தாளர்களால் எழுதப்பட்டு 2,400 பதிப்பாளர்களால் வெளியிடப்பட்ட வெளியீடுகள் அவை. 950 வகையான சஞ்சிகைகள் உள்ளடங்குகின்றன. சுமார் 122 ஆண்டுகளில் வெளியிடப்பட்டவை.

http://www.noolaham.org/

தமிழில் எழுத்துணரி இதுவரை சாத்தியமாகவில்லை என்பதால் ஒவ்வொரு வெளியீட்டுக்கும் உள்ளடக்கம் இணைக்க வேண்டியுள்ளது. அவ்வாறு 65 சதவீதமானவற்றுக்கு உள்ளடக்கம் இணைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் ஆவணகம், மலையக ஆவணகம் ஆகிய சிறப்புச் சேகரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் போன்ற ஆய்வு நிறுவனங்கள் முதல் வேம்படி மகளிர் கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி போன்ற பாடசாலைகள் வரை பல நிறுவனங்களின் வெளியீடுகளை முழுமையாக ஆவணப்படுத்தும் செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

2013 இல் முன்னெடுக்கப்பட்ட தமிழ் ஆவண மாநாட்டின் ஆய்வுக் கட்டுரைக் கோவை 600 க்கும் அதிக பக்கங்களில் வெளியாகிப் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

24 அரிய சுவடிக் கட்டுக்கள் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன. 1000 க்கும் அதிகமான ஆளுமைகள், நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. எல்லாவெளியீடுகளையும் அவற்றுடன் தொடர்புடைய ஆளுமைகள், நிறுவனங்கள், ஊர்களுடன் தொடர்புபடுத்துவதனூடாக இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஒரு முழுமையான ஆவணப்படுத்தலினைச் சாத்தியப்படுத்துவதன் ஆரம்பச் செயற்பாடுகளே இவையாகும்.

நூலக நிறுவனத்தினைத் திறம்பட முன்னெடுக்க உங்கள் ஒவ்வொருவருடைய ஒத்துழைப்பும் அவசியமாகிறது. குறிப்பாக நிதிப்பங்களிப்புக்கள் அவசியமாக உள்ளன.

http://noolahamfoundation.org/web/en/contact

உங்கள் கருத்துக்கள்