08.01.2021 வெள்ளியன்று மாலை 4.00 மணிக்கு “” ஓவியக் கண்காட்சி வைபவரீதியாக 209, பலாலி வீதி, கோண்டாவிலில் அமைந்துள்ள இயற்கைவழி இயக்கத்தின் அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண பணிப்பாளர் (கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரம்) வைத்தியர். எஸ். வசீகரன் அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார். பேராசிரியர். சிறீஸ்கந்தராஜா, திரு. அனந்தராஜ் மற்றும் சூழலியலாளர் ஐங்கரநேசன் முதலான பல விருந்தினர்கள் இந்நிகழ்வில் நேரிலும் இணையவழியிலும் இணைந்துகொண்டனர்.
அறிமுக உரையை நிகழ்த்திய புதியவெளிச்சத்தின் இணைப்பாளரும் இயற்கைவழிச் செயற்பாட்டாளருமாகிய குலசிங்கம் வசீகரன் அவர்கள் தனதுரையில் இயற்கை விவசாய வாரத்தின் தோற்றம்; இன்றைய காலப்பகுதியில் அதன் அவசியம் பற்றிக் குறிப்பிட்டார். திரு. அனந்தராஜ் அவர்கள் வாழ்த்துரையில் கொரோனாப் பெருந்தொற்றுக்காலப் பகுதியில் மக்கள் பலர் வீட்டுத்தோட்டத்திலும் இயற்கைவழி வேளாண்மையிலும் ஆர்வம் காட்டுகின்றார்கள் – அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி நாம் எமது முயற்சிகளை முன்கொண்டுசெய்ய வேண்டும் எனக் கருத்துரைத்தார்.
உழவன் வாழ்வையும் இயற்கையோடியைந்த வேளாண்மையின் நுட்பங்களையும் ஒருங்கே வெளிப்படுத்துவதாக “ஏரோவியம்” ஓவியக் கண்காட்சி அமைகிறது. சனவரி 8 முதல் 14 வரையான இயற்கை விவசாய வாரத்தில் இயற்கைவழி இயக்கத்தின் அலுவலகத்தில் இந்த ஓவியங்களை நேரில் பார்வையிடலாம். அத்துடன் இயற்கைவழி இயக்கத்தின் முகநூற் பக்கத்திலும் பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயப் போதனாசிரியராகிய திரு சிவதாஸ் அவர்கள் தன் கள அனுபவத்தினூடும் கருத்தூன்றிய வாசிப்பினூடும் பெற்ற எண்ணங்களை அழகிய சித்திரங்களாக்கித் தந்துள்ளார் ஓவியர். சங்கர் அவர்கள். மூத்த இயற்கைவழி இயக்க உறுப்பினர்கள் மதிப்பீட்டாளர்களாக இருந்து இந்த முயற்சிக்கு ஒத்துளைப்பு நல்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விவசாயப் போதனாசிரியர். சிவதாஸ் தனதுரையில் அரசியல் நெருக்கடிகள், பொருளாதாரக் கொள்கைகள் முதற்கொண்டு பல்வேறு காரணிகளால் விவசாயப்பெருமக்கள் பாதிக்கப்பட்டுருப்பதை காட்டும் ஓவியம், பண்ணைகளின் வகைகள் போன்ற விடயங்களை வெளிப்படுத்தும் நேரடியாக விவசாய விரிவாக்கற்பணியுடன் தொடர்புடைய ஓவியங்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொன்னார். அவர் மேலும் கருத்துரைக்கையில் இந்த ஓவியங்களை தாமும் ஓவியர் சங்கரும் பாடசாலை மாணவர்கள், இயற்கைவழி விவசாயிகள் மற்றும் விவசாயப் போதனாசிரியர்கள் பயன்பெறக்கூடியவகையில் உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் திரு. ஐங்கரநேசன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் தான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் ‘சேதன விவசாயக் கண்காட்சி” ஒன்றினை ஒவ்வொரு வருடமும் நல்லூர் விழாக்காலத்தில் பின்வீதியில் நடாத்தி வந்ததாகவும் பின்னர் அது தடைப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் பாரம்பரிய விதையினங்களைப் பேணிப்பாதுகாக்கும் பணியினைத் தான் ஆரம்பித்திருந்ததாகவும் அதுவும் பின்னர் தடைப்பட்டுப் போனதாகவும் கவலை தெரிவித்தார். இயற்கைவழி இயக்கம் போன்ற சமூகச் செயற்பாட்டியக்கங்களே இதுபோன்ற பணிகளை எதிர்காலத்தில் வினைத்திறனாக ஆற்றமுடியுமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
உலகளாவிய ரீதியில் குறிப்பாக ஐரோப்பாவில் இயற்கைவழி வேளாண்மையை சமூக இயக்கங்களே அரசுகளோடு பேசி அழுத்தம் கொடுத்து முன்னெடுக்கின்றன என்ற கருத்தினை அழுத்தமாகப் பதிவுசெய்தார் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா அவர்கள். மேலும் பேசுகையில் விவசாயம் ஒரு இலாபநோக்குள்ள வியாபாரம் எனக் கருதும் சக்திகளிற்கு மாற்றாகவும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படும் வேளாண்மை மூலமே உணவு உற்பத்தி சாத்தியமாகும் எனக் கருதுவோருக்கும் மாற்றாக இரண்டு விசைகளிற்கும் மத்தியில் செயற்படவேண்டிய தேவை இயற்கைவழிச் செயற்பாட்டாளர்களிற்குண்டு எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய புதியவெளிச்சம் அமைப்பாளர் நவஜீவன் அனந்தராஜ் அவர்கள் மேற்குலகில் இயற்கைவழி உற்பத்திகளிற்கான சந்தை மிகப்பெரியதென்றும் அதனைப் பயனுள்ள வகையிற் பயன்படுத்திக்கொள்ள நமது விவசாயிகள் முன்வரவேண்டுமென்றும் அறைகூவல் விடுத்தார். இறுதியாக விவசாயப் போதனாசிரியர். சிவதாஸ் அவர்கள் தனது கள அனுபவங்கள் சிலவற்றினை இயற்கைவழிச் செய்ற்பாட்டாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். இயற்கைவழிச் செயற்பாட்டாளர் அரனின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுக்கு வந்தது.