ஆஸ்திரேலியாவில் ஈழத்தமிழ் பொறியியலாளரின் சாதனைகள்

ஈழத்தமிழ் பொறியியலாளர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் படைத்துள்ள சாதனையொன்று உலகத்தமிழர்கள் அனைவரையும் பெருமைகொள்ள வைத்துள்ளது.

ஆஸ்திரேலிய வாழ் தமிழ்ம க்களின் உற்ற நண்பனும் தாயக மேம்பாட்டிற்கும் தன்னாலான உதவிகளை தொடர்ந்து நல்கிவருபவருமான சண் குமார் அவர்கள் தான் சார்ந்த பொறியியல்துறையில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

இதற்காக ஆஸ்திரேலிய பொறியியலாளர்கள் குழும சஞ்சிகையான “CREATIVE” 2017 ஆம் ஆண்டுக்கான “புதுமுயற்சி மூலம் சாதனைபடைத்த பொறியியலாளர்” என்ற உயர்ந்த கௌரவத்தை அவருக்கு வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியா முழுவதிலுமிருந்து விண்ணப்பித்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொறியிலாளர்களிலிருந்து 30 பேருக்கு வெவ்வேறு பிரிவுகளில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முப்பது பேரில் ஒருவராக சண் குமார் அவர்களுக்கு இந்த தேசிய விருது கிடைத்திருக்கிறது.

இருநூறுக்கும் மேற்பட்ட பொறியியலாளர்கள் மத்தியில் தேசிய அளவில் இந்த விருதை பெற்றுக்கொள்ளும்வகையில் இவர் புரிந்த சாதனை என்ன?

அடுக்கு மாடி கட்டடங்களை நிர்மாணிக்கும் பாரம்பரிய முறை அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஒவ்வொரு தளங்களையும் ஒவ்வொன்றின் மேலாக கட்டியெழுப்பி கடைசிக்கட்ட அலுவல்கள் அனைத்தையும் செய்து முடித்து கட்டடம் முழுமைபெற பல வருடங்கள் கடந்திருக்கும். பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு, கட்டடத்தை சூழ பயங்கர இரைச்சல், போக்குவரத்து நெருக்கடி அது இது என்று ஏகப்பட்ட பிரசவ வேதனைகளை அனுபவித்துத்தான் ஒரு அடுக்குமாடி கட்டடம் முற்றுமுழுதாக இந்த பூமியில் வந்து பிறக்கிறது.

ஆனால், சண் குமார் அவர்கள் மேற்கொண்ட புதிய முயற்சி மேற்குறிப்பிட்ட சகலவிதமான உபாதைகளையும் சரிபாதியாக குறைத்து இலகுவான முறையில் அடுக்குமாடி கட்டடங்களை கட்டியெழுப்புவதில் பெருவெற்றி கண்டிருக்கிறது.

அதாவது, ஒரு அடுக்குமாடி கட்டடத்தொகுதியின் ஒவ்வொரு தளத்திலும் நிர்மாணிக்கப்படவுள்ள அலுவலகங்கள், வீடுகள், மண்டபங்கள் போன்றவற்றை தேவைக்கேற்றவாறு தரையில்வைத்து சரியான அளவுகளில் தனித்தனியாக கட்டிமுடித்துவிட்டு, குறிப்பிட்ட அடுக்குமாடி தொகுதியில் அவை எங்கெங்கு அமையவேண்டும் என்ற திட்டத்தின்படி கிறேன் மூலம் தூக்கிச்சென்று அவற்றை சரியான இடங்களில் இறக்கிவைத்து பொருத்துவதன் மூலம் தொடர்ந்து கட்டடத்தை நிர்மாணித்துக்கொண்டு செல்வது. Prefabricated construction method.

சுருக்குமாக சொல்வதானால், சிறுவர்கள் விளையாடும் building blocks அல்லது lego விளையாட்டுப்போன்ற படிமுறையை பலமாடி கட்டடங்களை நிர்மாணிக்கும் திட்டத்தில் புகுத்தி சர்வ சாதரணமாக சாதித்திருக்கிறார் மனுசன்.

இதுவரை காலமும் உலகில் எந்த பாகத்திலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஆம்! அமெரிக்காவில் 33 மாடி கட்டடம் ஒன்றை இவ்வாறு கட்டுவதற்கு ஆரம்பித்து அந்த வேலையில் அவர்கள் சரியான திட்டமிடல்களும் நிபுணத்துவமும் இல்லாமல் சுமார் நான்கரை வருடங்கள் இழுத்தடித்து கடைசியில் அந்த கட்டத்தை கட்டி முடித்திருக்கிறார்கள். இதனை சாதனையென்று கூறிவிடமுடியாது.

சண் குமார் அவர்களின் திட்டமிடலில் மெல்பேர்ன் நகரின் மத்தியில் கட்டப்பட்ட La Trobe tower என்ற கட்டடம்தான் ஆஸ்திரேலியாவிலேயே “முன் தயார்செய்யப்பட்ட கட்டட நிர்மாணிப்பு நிபுணத்துவம்” – (prefabricated construction method) மூலம் கட்டப்பட்ட அதி உயர்ந்த கட்டடம் ஆகும். 42 மாடி கட்டடத்தை 19 மாதங்களில் கட்டி முடித்திருக்கிறார்கள். இந்த கட்டத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு முதலில் முற்றாக மறுப்பு தெரிவித்த மெல்பேர்ன் நகர கவுன்ஸில், இந்த திட்டம் நகரின் மையத்தில் பெரும் சத்தத்தை ஏற்படுத்தப்போகிறது, போக்குவரத்து நெரிசலை உண்டாக்கப்போகிறது என்று காரணம்கூறி திருப்பி அனுப்பவிட்டது. அதன்பின்னர், சண் குமார் அவர்களின் குழு விக்டோரிய அரசாங்கத்திடம் மேன்முறையீடு செய்து பெற்றுக்கொண்ட அனுமதியின்படி இந்த கட்டடத்தை கன கச்சிதமாக கட்டிமுடித்து மேற்பார்வையிட வந்திருந்த மெல்பேர்ன் நகர கவுன்ஸில் அதிகாரிகளையே வாயை பிளக்கவைத்துவிட்டது.

இந்த அபார சாதனையுடன் தனது முயற்சியை நிறுத்திவிடாது தொடர்ந்தும் பல கட்டடங்களில் தனது திறமையை நிரூபிப்பதற்காக களத்திலேயே நின்றுகொண்டிருக்கிறார் சண் குமார்.

இவரது இந்த சாதனையால் ஆஸ்திரேலிய பொறியியலாளர் குழுமம் முழுவதுமே பெருமைகொண்டிருக்கிறது. ஏன், ஆஸ்திரேலியாவே அவரை கொண்டாடுகிறது.

 

சாதனை கட்டடமான La Trobe tower கட்டப்பட்டபோது எடுக்குப்பட்ட காணொலி

https://www.youtube.com/watch?v=JUHBX4SgMck

உங்கள் கருத்துக்கள்