காரைநகர் இளம் விவசாயிகளுக்கு கிளைமத்தோன் நிகழ்வில் முதலாமிடம்

இயற்கை வழியில் நெல்செய்கையை ஊக்குவிக்கும் காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்துக்கு Climathon Jaffna நிகழ்வில் முதலாமிடம்

எங்கள் தேசத்தின் உண்மையான கதாநாயகர்கள் இவர்கள் தான்.

Climathon Jaffna – காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளல் தொடர்பான
சர்வதேச நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் 25.10.2019 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி அருகில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமானது.

நேற்று காலையில் ஆரம்பமான குறித்த நிகழ்வுகளில் 24 தனிப்பட்ட மற்றும் குழுக்களும் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்கள், அமைப்புக்கள் தொடர்பிலான விளக்கக்காட்சிகளை (presentations) மத்தியஸ்தர்கள் முன்னிலையில் விளங்கப்படுத்தினர். ஒவ்வொரு விளக்கக்காட்சிகளுக்கும் ஐந்து நிமிடங்களும் பின் இரண்டு நிமிடங்கள் கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டன. அதில் நடுவர்களின் கேள்விகளுக்கு தனிப்பட்ட மற்றும் குழுக்களை சேர்ந்தவர்கள் பதிலளித்தனர். மதியம் தாண்டியும் 2 மணிவரை 24 குழுக்களின் விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன.

பின் மாலை நிகழ்வுகளின் போது நடுவர்களின் இறுதி தீர்மானத்தின் படி “இயற்கைவழி காரைநகர் – ஒரு சூழலியல் தீவு” “organic karainagar – an eco island” என்கிற திட்டத்தை காரைநகரில் செயற்படுத்தும் காரை இளம் விவசாயிகள் கழகத்துக்கு முதலாமிடம் கிடைத்தது.

Climathon Jaffna நிகழ்வில் பங்கேற்று வெற்றியீட்டியதன் மூலம் 80,000/= பரிசுத்தொகையை பெற்றுக் கொண்டதுடன் 2020 இல் பிரான்ஸ் பாரிஸ் இல் நடைபெறும் உலக கிளைமத்தோன் நிகழ்வில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பையும் பெற்றுக் கொள்கின்றனர்.

இது தொடர்பில் காரைநகர் இளம் விவசாயிகள் கழக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நிரோஜன் அவர்களிடம் கேட்ட போது,

யாழ்ப்பாணத்தில் குறிப்பாக நெற்செய்கையில் கூடுதலான இரசாயனங்கள் பாவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அன்று தொட்டு காரைநகரில் நெற்செய்கையில் இரசாயனபாவனை குறைவாகவே இருந்து வருகின்றது. ஏனெனில் இன்றும் 75 வீதத்துக்கும் அதிகமானோர் மொட்டைக்கறுப்பன் என்கிற பாரம்பரிய நெல் இனத்தை தான் பயிரிட்டு வருகின்றனர். குறித்த பாரம்பரிய இனத்துக்கு இயற்கை பசளைகளே போதுமானது. தற்போது மேம்படுத்தப்பட்ட நம்பர் நெல்லினங்களையும் குறிப்பிடத்தக்களவான விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.

தற்போது காரைநகரில் 30 ஏக்கரில் இயற்கை வழியில் நெல் பயிரிடப்பட்டு வருகின்றது. அதனை நாங்கள் 2028 இல் காரைநகரில் உள்ள முழுமையான 420 ஹெக்டேயர் (கிட்டத்தட்ட 1000 ஏக்கர்) வயல் நிலங்களையும் இயற்கை வழிக்கு மாற்றுவோம் எனும் கருதுகோளோடு இயங்கி வருகின்றோம்.

இங்கு நெல்லை பயிரிடும் விவசாயிகள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலில் தான் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

விவசாயிகளுக்கு தொழிநுட்ப ஆலோசனைகளையும், வசதிப்படுத்தல்களையும் செய்து கொடுக்கும் நோக்கோடு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக் கிழமைகளில் பல்வேறு விழிப்புணர்வு செயற்றிட்டங்களையும் துறைசார்ந்த நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்கேற்போடு நடாத்தி வருகின்றோம்.

இரசாயனங்களை பாவிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வுகளை விவசாயிகள் மட்டத்தில் ஏற்படுத்துவதற்காக உலக புற்றுநோய் தினம், உலக சுற்றாடல் தினம் போன்ற பல்வேறு தினங்களையும் விழிப்புணர்வு தினங்களாக, நிகழ்வுகளாக நடாத்தி வருகின்றோம்.

ஏற்கனவே இயற்கை வழியில் வீட்டுத்தோட்டங்களை செய்யும் செய்கையாளர்களிடம் இருந்து மரக்கறிகளை பெற்று காரை இளம் விவசாயிகளின் இயற்கை அங்காடியில் சந்தைப்படுத்தி வந்துள்ளோம். அந்த அங்காடி பருவமழை காரணமாக வீட்டுத்தோட்ட செய்கையாளர்களிடம் இருந்து மரக்கறி வழங்கல்கள் குறைந்தமையால் நிறுத்தி வைத்துள்ளோம். வரும் தை மாதத்தில் இருந்து அதனை மீளவும் ஆரம்பிக்க உள்ளோம்.

எம் மண்ணில் இயற்கை வழியில் தடம் பதித்து நீண்டகால தூர நோக்கோடு இயங்கும் காரைநகர் இளம்விவசாயிகள் கழக இளையோருக்கு மேலும் பல வெற்றிகளை குவித்து முன்னேற வாழ்த்துக்கள்.

Organic karainagar – an eco island presentation video:
https://www.youtube.com/watch?v=UNX2KYfQjS4

கிரிசாந்தன் செல்வநாயகம்

உங்கள் கருத்துக்கள்